யாழ்ப்பாணத்தின் கிராமியப் பண்பாடு


யாழ்ப்பாணத்தின் கிராமியப் பண்பாடு

 யாழ்ப்பாணப் பண்பாடு என்பது மத்தியதர மக்களின் ‘பண்பாடு’ என்ற கருத்து நிலைமையே காணப்படுகின்றது. இதுவே பதிவுகளாகவும் இருக்கின்றன. அதிகமாக யாழ்ப்பாணத்தான் கோயில்களை அண்டி வாழ்கிறான் அல்லது வாழ்ந்திருக்கிறான். இதனால் ‘சைவமும் தமிழும்’ கலந்துள்ளதோர் யாழ்ப்பாணப்பண்பாடு மேலோங்கிக் காணப்படுவதாக பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

‘சமூகப் பிறவிகளான மனிதர்கள், தமது நடத்தை முறைகளை பல்வேறுபட்ட முறைகளில் வழிநடத்துகின்ற, கட்டுப்படுத்துகின்ற ஓர் ஒழுங்கமைப்பினை ஆக்குவதன் மூலமும் மீளாக்கம் செய்வதன் மூலமும் தங்கள் இயல்பினை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்’
  என்று மக்ஜவர் தனது சொசைற்றி என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

‘ஒரு வாழிடவரையறைக்குள் சீவிக்கும் பொழுது அந்தச் சமூகம் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பினை கொண்டதாக அமையும். (ளுழஉயைட ளுவசரஉவரசந) அந்தச் சமூகத்தின் பல்வேறு அலகுகளிடையேயும் நிலவும் காலச் செம்மை பெற்ற ஒழுங்கு முறைப்பட்ட அமைவொழுங்குள்ள உறவுகள் இந்தக் கட்டமைவை புலப்படுத்தி நிற்கும். இவ்வாறு அமையும் கட்டமைவு அதன் இயங்குநிலையில் ஓர் ‘அமைப்பு’(ளுலளவநஅ) ஆக தொழிற்படும். அந்தச் சமூகம் இயங்கும் நிலையை விளங்கிக் கொள்வதற்கு அது எவ்வகையில் ஓர் ‘அமைப்பு’ தொழிற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். அமைப்பு என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ள பாகங்கள், பொருள்கள், உயிர்களின் தொகுதி என்பர். அந்த இயங்குநிலை முறைமை அதற்கு ஒரு ‘தனித்துவத்தை’ வழங்கும் எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி இங்கு குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத்தக்கது.

 

யாழ்ப்பாண சமூகத்தில் நிலவுடைமையாளர்களாக இருந்தவர்களிடம் அதிகாரம் காணப்பட்டதால் அவர்களின் பண்பாடு யாழ்ப்பாணப் பண்பாடாக சுட்டப்படுவதும் நோக்கற்பாலது. நிலத்தில் ‘உழைப்போர்’ நிராகரிக்கப்பட்டவர்களாக அல்லது கீழ்நிலையில் மதிக்கப்பட்டவர்களாக காணப்பட்டார்கள்.

 “சமூக உருவாக்கம் என்பது சமூக உறவுகளின் பண்முகப்பட்ட கட்டமைப்பினைச் சமூகத்தின் பொருளாதார கருத்து நிலை மட்டங்களினதும் சில விடயங்களில் அரசியல் மட்டத்தினது ஒழுங்கினை நிலையைக் குறிப்பதாகும். இந்த ஒழுங்கினை நிலையில் பொருளாதாரத்தின் தொழிற்பாட்டு பங்கு முக்கியமானதொன்றாகும்.

மேலான்மையுடையதாகவுள்ள உற்பத்தி உறவுகளின் நடைமுறை நிலைப்பாடு ஒவ்வொரு மட்டத்திற்கும் ஒவ்வொரு வகையான செயல் வன்மை நிலையினையும் ஒன்று மற்றொன்றில் தலையிடுவதற்கான முறைமையையும் வழங்குகிறது. இதனால், அந்த மேலான்மையுடைய உற்பத்தி உறவுகள், நிர்ணய சக்தி உடையனவாக அமைகின்றன.”
        (ஹிண்டஸ்,ஹேர்ஸ்ற் 1975)

 மேற்சொன்ன வரைவிலக்கணத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண சமூகத்தின் நிலத்திற்குச் சொந்தக்காரன் மேலாண்மை பொருந்தியவனாக காணப்படுகின்றான். இவனே சாதி அமைப்பு முறையில் உயிர்த்தவனாகவும் காணப்படுகின்றான். யாழ்ப்பாணச் சமூகத்தில் தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டே சாதி சுட்டப்படுகின்றது. இங்கு ஒரு சமூக அதிகார அடிக்கமைவு காணப்படுகின்றது. அது சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அதுவே சமூக உறவுகளையும் நிர்ணயிக்கிறது.

 குடும்ப உருவாக்கத்தில் (திருமணத்தில்) சாதி பெரும் செல்வாக்கைச் செலுத்துவதை இன்றும் காணலாம்.

 யாழ்ப்பாணச் சமூக அமைப்பு பிரதேசத்திற்கு பிரதேசம் விசேட பண்புகளைக் கொண்டுள்ளது. இது பிரதேச வாதமாகக் காணப்படுகின்றது. வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பகுதி என்று இது பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. நில அமைவு, அங்குள்ள வளங்கள், தொழில் முறைகளுக்கு ஏற்ப விசேட பழக்கவழக்கங்கள், பேச்சுமுறைகள், நம்பிக்கைகள் என்பன வேறுபடுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒவவொரு சாதிக்குமான ஏறத்தாழ வரையறுக்கப்பட்ட வாழிடப்பகுதிகளும் காணப்படுவதோடு ஒரு சாதியினர் வாழும் பகுதிக்குள் சிறு சிறு பகுதிகள் காணப்படுவதையும் அவதானிக்கலாம்.

 யாழ்ப்பாணத்தான் என்ற வரையறைக்குள் நகர்ப்புறமும் கிராமப் புறமும் அடங்குகின்றன. அதேவேளை அவற்றிற்கிடையே பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. இவர்களுக்குள் வேறுபாடுகள் காணப்பட்டாலும் பொதுவான பண்புகள் காணப்படுவதையும் உணரமுடிகிறது. ஒரு யாழ்ப்பாணத்தான் பின்வரும் குண இயல்புகளோடு குறிப்பிடப்படுகின்றான். சிக்கனமானவன், பழமைபேண்வாதி, மதப்பக்தி உடையவன், பிடித்ததை விடாதவன், ஒரு விடயத்தை ஆற அமரப் பார்ப்பவன், பொதுவான கல்வியறிவுடையவன், வரப்போவதெல்லாம் ஆபத்தானதே எனப் பார்ப்பவன், ஊழலில் நம்பிக்கை உடையவன், கிண்டல் கேலிக்காரன், சந்தேகப் பிராணி, போட்டியிடுபவன், விடாது வழக்காடுபவன், உணர்ச்சி வசப்படுபவன், கலந்து நடந்து கொள்பவன், மற்றவர்களைப் பற்றித் தெரிந்திருப்பதில் நிபுணன், தான்  பேச விரும்புவன், சாதிக்குணமுடையவன், மூடநம்பிக்கைகள் உள்ளவன் “கிளரிக்கல் மனோபாவம்” கொண்டவன், குடும்பமயப்பட்டவன், அடக்குமுறைகளைத் தாங்கிக் கொள்பவன், மற்றவர்களுடன் கூடி வாழும் பண்புடையவன் அல்லன், எதேச்சதிகாரப் போக்குக் குணமுடையவன், ஆணாதிக்ககாரன், பொருள் நலத்தை நோக்குபவன்..
– (றொபேட் ஹொம்ஸ், யாழப்பாணம் 1980)

 யாழ்ப்பாணத்தில் காணப்படும் சமூகங்களுக்கும் கிராமங்களுக்கிடையில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் பாரம்பரிய விளையாட்டுக்கள் எல்லாச் சமூக அமைப்புக்களில் பொதுவாக காணப்படுகின்றன. அதிகமாக விளையாட்டுக்கள் பொதுமையானவையாக எல்லாச் சாதியினரும் ஃ சமூகத்தினரும் விளையாடுபவையாகக் காணப்படுகின்றன. ஒரே விளையாட்டுக் கிராமத்திற்கு கிராமம் சிறு சிறு வேறுபாடுகளோடு விளையாடப்பட்டாலும் விளையாட்டின் விதிகளும் தன்மையும் ஒன்றாகவே காணப்படுகின்றன. வேகமாக நகரமயமாகிய கிராமப்பண்புகள் தொலைந்து போவதன் காரணமாகவும் கல்வியை முதனமைப்படுத்தி விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டாத பெற்றோர் சமூகத்தின் எழுச்சிகாரணமாகவும் பாரம்பரிய விளையாட்டுக்கள் iவிடப்பட்டு வருகின்ற சூழ்நிலை காணப்பட்டாலும் குறிப்பிடப்பட்ட சாதியினருக்கு அல்லது சமூகத்திற்கான பாரம்பரிய விளையாட்டு என்று இனங்காண்பது கடினமாகவே உள்ளது.

அனைத்து சமூக ஃ சாதி அமைப்பிலும் சிறுவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுகின்றர்கள். யாழ்ப்பாணத்தில் தற்போது காணப்படும் கிராமியப் பாண்பாட்டை வயல் அல்லது தோட்டக் கரைகளில் அண்டி வாழும் மக்கள் கூட்டத்தினரிடையேயும் கடற்கரையோரங்களில் அண்டிவாழும் மக்கள் கூட்டத்தினரிடையேயும் காணமுடிகிறது. இந்தக் கிராமங்களில் காணப்படுகின்ற சில விசேட பண்புகள் அல்லது பழக்க வழக்கங்கள், நில அமைவு முறைகள், தொழில் என்பன அவர்களுக்கான பண்பாட்டையும் கருத்து நிலையையும் தீர்மானிக்கின்றன. கிராமங்கள், சிறு கோயில் வழிபாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளன. பிள்ளையார், முருகன், கிருஸ்ணன், அம்மன் போன்ற தெய்வங்களின் வழிபாடுகள் வேரூன்றி உள்ளன. இங்கு காணப்பட்ட சிறு தெய்வ வழிபாடு ஆகமமயமாகி பெரும் கோயில் வழிபாடுகளாக மாறிவருவதும் நடைபெறுகிறது. இருந்தாலும் நம்பிக்கைகள், விரத அனுஸ்டானங்களும்,  படையல்கள் என்பன கிராமப் பண்பாட்டிற்கு ஏற்பவே காணப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்திலும் கோயில் பூஜைகளை அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களே நிகழ்த்தும் பழக்கம் இன்றும் உள்ளது. மடை வைத்தல், பொங்கல், வேள்வி போன்ற விசேட சடங்குகள் பௌர்ணமி தினத்தில் நடக்கின்றன. “கட்டுக்கேட்டு” சடங்கு நிகழ்த்துகின்ற பாங்கையும், பூசாரி (பிராமணர் அல்லாதவர்) நோய் தீர்ப்பவராக மந்திரம் உச்சரித்து திருநீறு போடுபவராகக் காணப்படுகின்றார்.

 கிராமியப் பண்பாட்டில் “திருமண உறவு” முக்கியமானது. பாலிய திருமணங்களை இங்கு காணலாம். ஐ.நா.சிறுவர்களுக்காக வரையறுத்துள்ள 18 வயதிற்குள் இரண்டு, மூன்று சிறுவர்களுடன் காணப்படுபவர்கள் அதிகமாக உள்ளார்கள். ஒருவர் குறிப்பாக ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது பண்பாட்டின் ஒரு கூறாக அமைந்துள்ளது. அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்வது ஏற்புடைய ஒரு கொள்கையாக உள்ளன.

 கிராமங்களில் அதிகமாக பிள்ளைகள் காணப்படுவார்கள். அவர்கள் இலவசக் கல்வியை பெறத் தயங்குவது அல்லது இடைவிலகுவது சாதாரண விடயமாக உள்ளது. சிறுவயதில் கடற்தொழில், வயல்வேலைக்கு சிறுவர்கள் செல்கிறார்கள். இதனால் மது அருந்தக் கற்றுக்கொள்வது சிறுவயதில் நடக்கிறது. சிறுவர்கள் கவனிக்கப்படாது விட்டாத்திகளாக விடுபடுகின்றார்கள்.

 கிராமங்களில் விட்டாத்திகளாக விடப்பட்ட சிறுவர்கள் ஒன்றுகூடி பாரம்பரிய விளையாட்டுக்களில் ஏதோ ஒன்றை விளையாடித் திரிவதைக் காணமுடியும். வீடு. சூழல் அனைத்திலும் பாரம்பரியமாக விளையாடிய விளையாட்டுக்களை சிறுவர்கள் சிறு, சிறு குழுக்களாக இணைந்து விளையாடுவார்கள். தற்போது மத்தியதர மக்களின் வாழ்முறை செல்வாக்குச் செலுத்துவதாலும் கிரிக்கெட், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களின் தாக்கத்தாலும் இந்த நிலைமைகள் மாற்றமடைந்து வருதையும் கூட இனங்காண முடிகிறது.

Explore posts in the same categories: Culture

Leave a comment